
மரபுத் தொடரின் பொருளறிதல்
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. 1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர். விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர். 2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான். விடை: கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள். 3. நேற்று தென்றல் காற்று அடித்தது. விடை: நேற்று தென்றல் காற்று வீசியது. 4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார். விடை: தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர். 5. அணில் பழம் சாப்பிட்டது. விடை: அணில் பழம் கொறித்தது. 6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா. விடை: கொடியிலுள்ள மலரைப் பறித்து வா. கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம்பெற்ற மரபு அ) பெயர்மாபு ஆ) வினைமரபு இ) ஒலிமரபு ஈ) இவை மூன்றும் மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.(சான்று) – எதிர் நீச்சல் வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு, வெற்றி பெற வேண்டும். 1. சொந்தக்காலில் நிற்றல் : தனக்கு எவரேனும் பொருளுதவி செய்வார்கள் என எதிர்பார்க்காமல், வேலவன் பள்ளியில் படிக்கும்போதே சிறுசிறு பணிகளைச் செய்து, பொருளீட்டித் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு, சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொண்டான். 2. தாளம் போடுதல் : அரசியலில் மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் தலைவர்கள், தங்கள் கூட்டணித் தலைவர்களின் கூற்றுகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாளம் போடுதலை நாம் காண்கிறோம். 3. மதில்மேல் பூனை : தேர்வு நெருக்கத்தில் மட்டுமே படித்துத் தேர்வு எழுதுவோர், தேர்வு முடிவு வெளிவரும்போது, மதில்மேல்பூனைபோல் மன அழுத்தத்தில் திண்டாடுவர். 4. நிறைகுடம் : நன்றாக, தெளிவுபடக் கற்றறிந்த சான்றோர், நிறைகுடம்போல் அமைதியாக இருப்பர். 5. கைதூக்கிவிடுதல் : ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, கல்வி கற்பித்து, மக்களைக் கைதூக்கிவிடக் காமராசர் பாடுபட்டார். 6. கண்ணாயிருத்தல் : இளையோர், மாணவப்பருவத்தில் கல்வி கற்பதில்மட்டுமே கண்ணாயிருத்தல் வேண்டும். 7. அவசரக்குடுக்கை: மக்களிடம் ஓரளவுக்கு அறிமுகமானவுடனே தன்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்து விடுவர் எனச் சிலர் அவசரக்குடுக்கைபோல் செயல்பட்டு, மூக்கறுபட்டுத் தோல்வி காண்பது உண்டு. 8. முதலைக் கண்ணீர் : தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலர், மக்கள் படும் துன்பங்களுக்காகத் தாம் போராடப் போவதாகப் பேசி, முதலைக்கண்ணீர் வடிப்பது உண்டு. 9. கானல்நீர் : முதியோர் இல்லத்தில் மகனால் சேர்க்கப்பட்டபோது, தங்கள் எதிர்கால வாழ்க்கை கானல் நீராகிப் போனதைப் பெற்றோர் உணர்ந்தனர். மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 1. ஆற அமர ஒரு செயலை செய்யும் முன் “ஆற அமர” யோசித்து செயலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 2. ஆணி அடித்தாற் போல நமது தேசிய கீதம் பாடும் போது மரத்தில் “ஆணி அடித்தாற் போல” அசையாமல் நிற்க வேண்டும். 3. அகலக்கால் தொழில் தொடங்கு முதன் சிந்தித்து “அகலக்கால்” வைக்காமல் சிறிய முதலுடன் தொடங்க வேண்டும். 4. வழிவழியாக தமிழர்களின் பண்பாடு “வழிவழியாக” பல தலைமுறைகளாக வளர்ந்தவை. 5. கண்துடைப்பு தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின் “கண்துடைப்பாக” ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுகின்றனர். தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. 1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன. வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன. 2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான். முருகன் சோறு உண்டு பால் பருகினான். 3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான். 4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன். வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன். 5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர். பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர். |