பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்


தமிழ்க்கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
     கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்  
     எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
     ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
     அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
     பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
      மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
— பெருஞ்சித்திரனார்

1. பிறந்த ஊர் சேலம் மாவட்டத்திலுள்ள – சமுத்திரம்.

2. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம்.

3. சிறப்புப் பெயர் – பாவலரேறு

4. நூல்கள்:

  • பள்ளிப்பறவைகள் (தொகுப்பு –குழந்தைப்பாடல்)
  • உலகியல் நூறு
  • எண்சுவை எண்பது
  • மகபுதவஞ்சி
  • கனிச்சாறு
  • ஐயை
  • கொய்யாக்கனி
  • பாவியக்கொத்து, 
  • நூறாசிரியம்

5. பள்ளிப்பறவைகள் நூலின் பிரிவுகள் – மூன்று –குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை.

6. இதழ்களை:

  • தென்மொழி, 
  • தமிழ்ச்சிட்டு, 
  • தமிழ்நிலம்

7. கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை – 8

8. செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று எண்ணியவர் – பெருஞ்சித்திரனார்.

அன்னை மொழியே

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்   

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!!


தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! 

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!          

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!


செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?    

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்      

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்


உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்              

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த        

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி              

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

பெருஞ்சித்திரனார்

9. 'அன்னை மொழியே' என்ற பாடலை இயற்றியவர் – பாவலரேறு.

10. கனிச்சாறு என்பதனை இயற்றியவர் – பாவலரேறு.

11. 'அன்னை மொழியே' என்ற கவிதையில் இடம் பெரும் மூவேந்தர்களில் ஒருவர் – பாண்டியர்.

12. "முந்துற்றோம் யாண்டும்" என்பது – கனிச்சாறு பாடலில் ஒரு தொகுதி.

13. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் – துரை மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்).

14. யாருடைய திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந் துள்ளது மற்றும் யாருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன? –பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

15. "திருக்குறளின் பெரும் பெருமைக் குறியவளே" என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடிவது – தமிழை.

16. பெருஞ்சித்திரனார் மாண்புகழாக சிறப்பிக்கும் நூல் – திருக்குறள்.

17. பெருஞ்சித்திரனார் கலைவடிவமாக சிறப்பிக்கும் நூல் – மணிமேகலை.

18. பெருஞ்சித்திரனார் என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் – சிலப்பதிகாரம்.

19. "வியக்கதக்க உன் நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்கு பற்றுணர்வை எழுப்புகின்றனவை எம்தமிழே!" – கனிச்சாறு.

ஓய்வும் பயனும்!

ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ 

ஓவியம் வரைந்து பழகு! 

தூய்மையோ டமைதி சேரும்!- நன்கு

 தோன்றிடும் உள்ள அழகு!


பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல 

பாடலைப் பாடி மகிழ்வாய்! 

தாக்குறும் துன்பம் யாவும் - இசைத் 

தமிழினில் மாய்ந்து போகும்!


அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ 

அன்றாடச் செய்தி படிப்பாய்! 

செறிவுறும் உன்றன் அறிவு - உளச்

 செழுமையும் வலிவும் பெறுவாய்!


மருத்துவ நூல்கள் கற்பாய் -உடன் 

மனநூலும் தேர்ந்து கற்பாய்! 

திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந் 

தீமையும் பொய்யும் களைவாய்!

— பெருஞ்சித்திரனார்

Enable Notifications OK No thanks